கவிதைகள் ஏழு

எல்லாமாகிய

தொட்டும் தொடாமற்

தொடுகோடாய்ப் போன நீ

கட்டித் தழுவாயோவென

வட்டத்திற்கு வருத்தம்.

கட்டிக் கனதூரம்

வட்டமாக்கியதே நானென

ஆரத்திற்கோ ஆராத்துயரம்.

விட்டமாய்ப் பாய்ந்து

விகிதம் பெருக்கி

பரிதித் தொட்டு பல ஆரமிட்டு

சுற்றும் கோட்டிற்கோ

பொல்லாத மெளனம்.

சன்னல்

நாம் பேசுவதற்கு என்றுமே ஏன்

சன்னலோரங்களை தேர்ந்தெடுத்தோம்..

நம் வார்த்தைகளை காற்றில்

தொலைக்க நினைத்ததாலா?…

நம் பொய்கள் பூமியைக் கடந்து

ஓடவேண்டும் என்பதாலா?…

நம் அறையின் இருள் நம் அச்சங்களைப்போல்

வெளித்தள்ளப்பட வேண்டும் என்பதாலா..

வெளிச்சங்களில் நம் குரல் விஸ்தரிக்க

இருட்டு மனிதர்களாக நாம் இறந்துபோவது

இதமாயிருப்பதாலா..

நமது இரட்டை வேடங்களை அறையிலிருத்தி

வெளிப்பச்சையை விமர்சிக்க

விடம் கொண்டதாலா..

இல்லை.. கதவுகளினருகில் நாம் வெளியேறிப்

பிரிந்துவிடுவோம் என்பதாலா..

சன்னலுக்குள் ஒரு ஆகாயம்

கொண்டுவந்து சிறைப்படுத்தி மகிழ்ந்தோமா..

அதுவுமில்லை ஆகாயம் சிறையெனவே

அறையை நிர்மாணித்தோமா..

என்னுலகம்

பூங்காவிலிருந்து எழுந்து

பூட்டைத்திறந்து வீட்டிற்குள் போனேன்.

வெறுமை தலை நீட்டியது.

பூச்செடி சில வாங்கி வீட்டில் வைத்தேன்.

கற்சிலைகள் சில,

கால் நோகுமென்பதால் நாற்காலி,

வெற்றுச் சுவருக்கு ஒரு குட்டி ஓவியம்,

எடுத்துப் படிக்க ஏடுகள் பலவென்று

வீட்டை எழுப்பினேன்..

வீடு எனதாயிற்று.

நூலகம், பூங்கா, நெடுஞ்சாலை, நிழற்கூடமென

எல்லாம் போயின..

பொதுச் சொத்து, பொது இடமென

பிரித்துப் பார்க்க

தனிச்சொத்தாய் என்னுலகம் குறுகியது

என் வீடாக..

ஏழ்மையெனப்படுவது யாதெனில்..

எட்டு நாள் பட்டினி

அகத்திக் கீரை பறித்துவந்து

அம்மா புகட்டுவாள்.

துணிமணிக் கிழிய பழைய

பட்டுச்சேலை கிழித்துப் பாவாடையாக்கி

பளபளக்கச் செய்வாள்..

பசியோ, தாகமோ..

பகல் முழுதும் விளையாட்டு,

இரவில் பாட்டென.. எல்லாக் காலமும்

நல்லாய்ப் போகும்.

ஏழ்மையை உணர்ந்தது

எட்டாம் வகுப்பில் வரலாற்றுப் புத்தகம்

திருடிய போதுதான்.

மெளனம்-மொழி-சாத்தியம்

வெற்றுத்தாளென ஒரு

ஒற்றைத்தாளை

பார்க்கையில் விளையும்

சந்தோஷம், ஏன்

ஒரு வெற்றுநாளின்

வெறுமையை கவலைக்கிடமாக்குகிறது.

பொருளற்ற அறையின்

எதிரொலிச் சாத்தியம்

மனதிற்கும் வாய்க்கையில்

மெளனம்தான் அரவம்.

புற்றின் வெறுமை – காற்றோட்டம்.

புதிய பரிமாணம் – வளர்ச்சி.

வெற்றுத்தாள் முன் மட்டுமே

எண்ணற்ற சாத்தியம்.

இனி சிட்டுக் குருவிகளிடமிருந்து கற்பதற்கு ஒன்றும் இல்லை.

என்முன்னே..

சன்னலின் வழியே சின்னக் குருவிதட்ட

சுக்கு நூறாய்ப்போன கண்ணாடியூடே

நான் என்று உணர்ந்த நான்

நானாகிப்போன நான்

என் முகவெட்டும் புகைப்படமும்

என் கொங்கைகளும் தாய்மைப் பசியும்

மனவெளியும் ஓவியமும்

இன்னும் பலவும்.

பிணி கொண்டலையும் புலியைபோலவே

அனுபவம் மதர்த்த தனிமைத்தேடலில்

நான் பெரிய மிகப்பெரிய

போரில் புஜம் தட்டும் பகவானேபோல

என் முன்னே..

நான் மரமாய், கிளையாய், மதிற்சுவராய்,

கற்றூணாய், காகிதமாய்

எனக்கு வெளியே

எதிரொலி மறுத்த நிஜமாய்..

சொல்லின் பொருளுக்கப்பால்..

பறந்து சென்ற சிட்டுக்குருவியறியாத ரகசியமாய்

செயலாய் சுயமுற்றெழுந்த நான்

இனி சிட்டுக்குருவிகளிடமிருந்து

கற்பதற்கொன்றுமில்லை.

நன்றி: சாகித்திய அகாதமி

வாமனப் பிரஸ்தம்

அப்பாவுக்கு போன்சாய்களைப் பிடிக்காது.

அம்மாவின் பிறந்தகத்தை குந்தகம் சொல்வார்.

ஓவியம் தெரிந்தும் அம்மா

அதிகம் வரையமாட்டாள்.

பாடத் தெரிந்தும் லவகுசா பாடல்கள்

மட்டும் பாடி கண்ணீர் உகுப்பாள்.

அம்மாவின் செருப்பு எப்போதும்

குழந்தைகள் அளவின் நடுவே.

நாற்பது வயதில் நடு வீட்டில்

கோலி விளையாடும் குழந்தையாய் போனாள் அம்மா.

வாமனப் பிரஸ்தமாம் போன்ஸாய்கள்.

அப்பாவுக்கு போன்ஸாய்கள் பிடிக்காது.