வரலாறு எழுதுதல்

வரலாறு, வரலாறு எழுதுதல் என்பவை தொன்று தொட்ட காலமாகவே இருந்து வருகின்றனவா? வரலாறு எழுத்து வடிவம் பெறுவதற்கு முன் நமது பேச்சுவழி கலாச்சாரங்களில் இருந்தமை நாட்டாற்கலைகள் மூலமாகவும், கல்வெட்டுக்கள் மூலமாகவும் இதர பல இசை நாடகங்கள், பாடல் மற்றும் ஓவியங்களின் வழி கண்டறியப்படலாம். குகைகளில் வாழ்ந்த காலம் முதலாகவே மனிதன் தனது தினசரி நிகழ்வுகள், நம்பிக்கைகள், அனுபவங்கள் ஆகியவற்றை குகைகளில் தீட்டத்தொடங்கிவிட்டான். அப்படி இருக்கையில் மனிதர்கள் தன் வரலாறு கூறுதல் என்ற அளவிலேயே அது கூறப்படும் மொழி, இடம், காலம், ஊடகம் என்ற அளவில் தான் கூறவந்ததை முற்றிலும் மற்றவர்களுக்கு சென்றடையுமாறு கூறிவிட்டானா என்பதில் ஐயங்கள் பல.

ஐரோப்பிய மறுமலர்ச்சிக் காலத்தின் முக்கிய நிகழ்வாக எழுந்த இந்த வரலாறு எழுதுதல் தன் வரலாற்றை மற்றுமல்லாது பிறர் வரலாறுகளையும் நிறுவ முயன்றதுடன் பாரம்பரியம், கலாச்சாரம் போன்ற சமூக காரணிகளையும் அவற்றிற்குரிய அளவுகோல்கள் பிறப்பிடங்கள் பற்றி மேற்கத்திய கலாச்சாரங்களுக்கு பாரபட்சமாகவே விரிக்கத்தலைபட்டது அனைவரும் அறிந்த உண்மை. மூவாயிரம் ஆண்டுகளுக்கு முன்னரே கலாச்சார ரீதியில் முன் தங்கியிருந்த எகிப்தை பின்னோக்கி தள்ளிவிட்டு கிரேக்கத்தை உலகக் கலாச்சார மையெமென நிறுவியது மேற்கத்திய வரலாற்றின் சாதனை வரலாற்றியலாளர் மார்டின் பெர்னல் தனது கறுப்பு எதீனா என்ற தனது நூலில் குறிப்பிடுகிறார். கலையின் கதை என்ற மிகவும் பிரபலமான தனது நூலில் காந்தாரக் கலைக்கு அரை பக்கம் ஒதுக்கிய ஈ.ஹெச். காம்ப்ரிச் இந்தியக் கலைமரபைப் பற்றி அதில் ஒன்றுமே குறிப்பிடுவதில்லை. ஆனால், இந்நூல் இன்று வரை உலகக் கலை வரலாற்றைப் பறைசாற்றுகின்ற நூலாக எல்லா பல்கலைக்கழகங்களிலும் படிக்கப்பட்டு வருகிறது.

அறிவுத்துறையை கையிலெடுத்திருக்கும் இன்றைய நவீன நிறுவனமான கல்வித்துறையின் அணுகுமுறைகளை கட்டுடைப்பு செய்தவர் தத்துவ ஞானி மிசேல் ஃபூக்கோ. அறிவுத்துறையை பல்வேறு பகுதிகளாக (உ.தா: வரலாறு, மருத்துவம், இலக்கியம், மானுடவியல், பொருளாதாரம், அரசியல்) பிரிப்பதையே பிரச்சினையாகப் பார்க்கிறார் அவர். தனது “பொருட்களின் அமைவு” (Order of things) என்ற புத்தகத்தில் போர்கேசை மேற்கோள் காட்டி ஒரு சீனப் பொருளடக்கத்தில் ஒன்றுபோலிருப்பதையும் வேறுபட்டிருப்பதையும் புரிந்து கொள்ள வேண்டிய தவிப்பில் ஏற்படுத்தப்பட்ட வகைப்படுத்தலை அவர் சுட்டிக்காட்டுகிறார்:விலங்குகளை இவ்வாறு வகைப்படுத்தலாம்:அ) அரசருக்குச் சொந்தமானவை, ஆ) இறந்தபின் கெட்டுப் போகாமல் பாதுகாக்க வேண்டியவை, இ) பயந்தவை, ஈ) பன்றிகள், உ) மாலுமிகளை தங்கள் பாடல்களால் திசை திருப்பும் பாதி மனித இனம், ஊ) அற்புதமானவை, எ) தெரு நாய்கள், ஏ) இந்த வகைப்படுத்தலில் சேர்க்கப்பட்டுள்ளவை, ஐ) மிகவும் உணர்ச்சி வசப்படுபவை, ஒ) எண்ணிலடங்காதவை, ஓ) ஒட்டகங்களின் அருமையான நுண்ணிய முடிகளால் வரையப்பட்டவை, ஒள) மற்றும் பல, ஃ) சமீபத்தில் தண்ணீர் குடுவையை உடைத்தவை, அ அ) ஈக்களிலிருந்து மிகவும் மாறுபட்டவை. இந்த வகைப்படுத்தலின் விசித்திரம் என்னவென்றால் முற்றிலும் மற்றொரு சிந்தனை முறைக்குறிய புனைவுகளைக் கொண்ட இவை நமது புரிதலுக்கு மிகவும் அப்பாற்பட்டு இருப்பதுதான்.

(தொடரும்)