செங்கரா: மறுக்கப்பட்ட நிலத்திற்காக மற்றுமொரு போராட்டம்

பிரான்சிலுள்ள ‘சயன்ஸ்போ’(science po) என்ற நிறுவனத்தைச் சார்ந்த ஆய்வாளர் கிரிஸ்டோஃபே ஜெபஃர்லோ(Christophe Jaffrelot:Hindu Nationalism-A Reader) தனது ஆய்வில் இந்தியாவிலேயே தொடர்ந்து பார்ப்பனர்கள் அதிக எண்ணிக்கையில் சட்டமன்ற பதவி வகிப்பது கேரளாவிலும், மேற்கு வங்காளத்திலும்தான் என்கிறார்.

மார்க்ஸியத்தின் மாபெரும் விசுவாசிகளெனப் பறை சாற்றும் கேரள மக்களின் மண்ணில் கடந்த பல மாதங்களாக தலித்துகளும் ஆதிவாசிகளும் ‘செங்கரா’வில் தமது நிலங்களை இழந்து பல்வகை கொடுமைகளுக்கு ஆளாகி வருகின்றனர். இது பற்றி அவ்வப்போது ஆங்கிலப் பத்திரிக்கைகள் வெளியிட்டபோதும் பல தன்னார்வக் குழுக்கள் தலையிட்டபோதும் நிலைமை இன்னமும் மாறாதபடியே உள்ளது. ஆர்.பி. கோயங்காவிற்கு சொந்தமான ‘ஹாரிஸன் மலையாளம் எஸ்டேட்’ எனும் ரப்பர் கம்பெனி 5000 குடும்பங்களின் விளைநிலத்தைக் கைப்பற்றிய வணிகச் சதியால் கடந்த 170 நாட்களுக்கும் மேலாக ஆயிரக்கணக்கான மக்கள் தங்கள் வீடுகளையும் நிலங்களையும் இழந்த நிலையில் கம்பெனியின் ரப்பர் தோட்டங்களின் நடுவே அமர்ந்த வண்ணம் போராடிக் கொண்டிருக்கின்றனர்.

புகைப்படக் கலைஞரிடம் சிறிது அரிசி கேட்டு நின்ற தாயார்(நன்றி: அஜிலால்)

இந்தியாவில் பெருமளவு சீர்திருத்தங்கள் நிகழ்த்தப்பட்டுவிட்டன என அதன் நடுத்தர மக்களும், நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமுமாக பல்கிப் பெருகும் கணிணித்துறை பெரு வணிகமும், துணை நகரங்களும், பொருளாதாரச் சிறப்பு நகரத் திட்டங்களும் மார்தட்டிக் கொண்டிருக்கின்றன. அதே நேரம் தொடர்ந்து நிலவி வரும் சாதிப் பிரச்சினைகளால் தலித்துகள் மற்றும் ஆதிவாசி மக்கள் தங்கள் உடமைகளையும் உரிமைகளையும் இழந்து வரும் கொடுமைகள் நடந்தவண்ணமே உள்ளன. நில உச்சவரம்பு சட்டங்கள்(land ceiling acts) பெருந்தோட்டங்களின் மீது அமல்படுத்தப்படமாலிருப்பது இதற்கான முக்கிய காரணம் என்று கூறலாம்.

பிரித்தானியரின் வருகைக்கு முன் சுயதேவைகளுக்காக விளிம்பு நிலையினர் விவசாயத்திற்குப் பயன்படுத்திய காடுகளை சந்தைக்குத் தேவையான
பணப்பயிர்களான தேயிலை, ரப்பர் போன்றவைகளின் விளைநிலங்களாக மாற்றிது காலனிய அரசு. இந்தோனேசியா மற்றும் லத்தீன் அமெரிக்க காலனிகளில் ஐரோப்பியர் இவ்வாறே கரும்புப் பயிரிடலை மேற்கொண்டனர். காலனியாதிக்கத்திற்குப் பிறகு இந்நிலங்கள் பெருமுதலாளிகளின் கைக்கு மாற்றப்பட்டன. இன்றுவரை இப்பெருந்தோட்ட முதலாளிகள் தம் நில வரம்புகளை அதிகரித்து வருவதுடன் அங்கு வாழ்ந்துவரும் விளிம்புநிலை மக்களின் ‘புறம்போக்கு’ நிலங்களை அரசின் உதவியோடு ஆக்கிரமிப்பும் செய்து வருகின்றன.

‘மார்க்ஸிய’ அரசின் மாநிலங்களான கேரளாவும், மேற்கு வங்கமும்கூட இதற்கு விதிவிலக்கல்ல. இந்திய அரசியலமைப்புச் சட்டப்படி இதனைக் கவனத்திலெடுத்து பெரும்பாலான மாநிலங்களில் உழுபவர்களுக்கே நிலங்கள் சொந்தம் என்று அறிவிக்கப்பட்டது. அதை மாநில அரசுகள் எவ்வாறு கையாண்டன என்பது வேறொரு கதை. 1967ம் ஆண்டு பொருளாதாரத்தில் பின் தங்கி இருந்த தலித் மக்களுக்கு அறிஞர் அண்ணாவால் வழங்கப்பட்ட நிலங்களை அப்போதைய ஆட்சிக்கு சம்பந்தப்பட்டவர்கள் அபகரித்து சொகுசு பங்களா கட்டியபோது தலித் மக்கள் அந்நிலங்களுக்குள் புகுந்து போராட்டம் நடத்தினர். அதனைத் தொடர்ந்து உயர்நீதிமன்ற ஓய்வு பெற்ற நீதிபதி சிவசுப்பிரமணியம் தலைமையில் 2006 ஜூலை 27 அன்று தமிழக அரசு விசாரணைக் கமிஷன் அமைத்தது. இவ்வழக்கு இன்றும் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. திரும்பவும் 2006ம் ஆண்டு பிரித்தானியரால் தலித் மக்களுக்கென்று வழங்கப்பட்ட பஞ்சமி நிலங்களைத் திருப்பித் தருமாறு கேட்டு போராட்டங்கள் தொடங்கின.

தலித்துக்களுக்கு நில உரிமை அளிப்பதில் உள்ள பிரச்சினை என்ன? தனது ‘தகப்பன் கொடி’ நாவலில் பஞ்சமி நிலப் பிரச்சினையை முன் வைத்து எழுதிய அழகிய பெரியவன் கூறுகிறார், “தலித்துகள் இம்மண்ணின் தொல்குடிகள். அவர்கள் இந்நிலத்தின் தொன்ம உரிமையாளர்கள். அவர்களை நிலமற்றவர்களாகவும், எப்போதும் கூலிக்காக கையேந்தும் உழைப்பாளிகளாகவும் ஆக்கியவர்கள் சாதி இந்துக்கள். அவர்களால் ஏற்படுத்தப்படும் அரசுகள் இதில் அக்கறை செலுத்துவதில்லை”( தலித் முரசு, பிப்ரவரி15, 2007) .

இச்சாதி இந்துக்கள் பார்ப்பனர்களானாலும் ஆதிக்கசாதி இந்துக்களானாலும் அவர்களால் தொடர்ந்து நடத்தப்படும் அரசாங்கங்களில் இம்மக்களுக்கு அளிக்கப்படும் அநீதி தொடர்கிறது.

பத்தொன்பதாம் நூற்றாண்டின் தொடக்கத்தில் கேரள மாநிலத்தில் தலித்துகளின் குரலாக ஒலித்தவரும் புரட்சிகர மாற்றங்களை செய்து காட்டியவருமான அய்யங்காளி உருவாக்கிச் சென்ற ‘சாது ஜன சம்யுக்த வேதி’(SJVSV) என்ற அமைப்பின் வாயிலாக அவர் கற்றுத்தந்த நில உரிமைப் போராட்டத்தைக் கடைபிடித்து வருகிறார்கள் செங்கராவினர். 1930களில் தலித் பெண்கள் இடுப்புக்கு மேல் உடையணியக் கூடாது என்பதை எதிர்த்து வெற்றி கண்டவர் அய்யங்காளி. தலித்துக்களிடையே நில உரிமை, கல்வியுரிமை பற்றிய விளிப்புணர்வை ஏற்படுத்திய அவரது மண்ணில் இடது சாரிகளின் ஆட்சியால் தலித்துகளுக்கு அனைத்து உரிமைகளும் வழங்கப்பட்டுவிட்டதாக கூறப்படுவதை பொய்ப்பிக்கிறது இப்போராட்டம்.

1996ம் ஆண்டிலேயே ஒப்பந்த முடிவு பெற்றுவிட்ட நிலத்தை ஆக்கிரமிப்பதுடன் பட்டா இல்லாத 1048 ஏக்கர் நிலங்களையும் சுற்றி வளைத்துள்ளது ‘ஹாரிஸன் மலையாளம் கம்பனி’. அவர்களது ஆக்கிரமிப்பு கிட்டத்தட்ட 6000 ஹெக்டேக்கர்களைத் தாண்டிவிட்டது என்றும் தரப்புக்கள் கூற ப்படுகிறது.

SJVSVயின் தகவலின்படி கேரளத்தில் நிலமில்லாதவர்களில் 85% த்தினர் பல தலைமுறைகளாகப் பொருளாதாரம், அதிகாரம், சொத்துரிமை மறுப்புகளுக்கு ஆளான தலித்துக்களும் ஆதிவாசிகளுமாவர். கிட்டத்தட்ட 12,500 தலித் காலனிகளாகவும் 4083 ஆதிவாசிக் காலனிகளாகவும் அரசியல், பொருளாதார மற்றும் கலாச்சார உரிமைகள் மறுப்பிற்கு நடுவே இம்மக்கள் வாழ்ந்து வருகின்றனர். 1970 ஆண்டு கொண்டு வரப்பட்ட நில சீர்திருத்தச் சட்டம் குத்தகைதாரர்களுக்கே நிலம் சொந்தம் என்று அறிவித்திருந்தபோதும் தாழ்த்தப்பட்ட சாதியினர் நிலத்தைக் குத்தகைக்கு எடுப்பது சாத்தியமில்லாத காரணத்தால் அடிநிலை தொழில்களுக்கு ஆட்படுத்தப்பட்ட இவர்கள் மீண்டும் நில உரிமையை இழக்க நேரிட்டது.

தற்போதைய சூழலில் பொதுமக்களின் நலனுக்காக அவர்களின் வேலை வாய்ப்புக்காகவும் நல் வாழ்வுக்காகவும் என்று சொல்லிக் கொண்டு அரசாங்கங்கள் மேற்கொள்ளும் மோசடி நடவடிக்கைகளில் ஒன்று நில ஆக்கிரமிப்பு. 1966ம் ஆண்டு 10இலட்சம் ஏக்கர் பட்டுவாடாவில் இருக்கிறதென்று கேரள அரசின் தகவல்கள் கூறுகையில் மூன்று அல்லது நான்கு இலட்சம் ஏக்கர்கள் மட்டுமே மக்களுக்கு பட்டுவாடா செய்யப்பட்டது. இந்த நிலைமையில் ‘டாடா’வின் கம்பெனிக்கு கேரள அரசு 1,43,000 ஏக்கரை ஒதுக்கியது குறிப்பிடத்தக்கது. தலித்துக்களுக்கு தரப்பட வேண்டிய குறைந்த அளவு கவுரவமும் மறுக்கப்பட்டு 1990 ஆண்டு அவர்கள் தங்கள் சமூகத்தில் இறந்தவர்களின் சடலத்தை தாங்களே தங்கள் வீட்டுக்குள் புதைக்க வேண்டிய நிலை ஏற்பட்டது.

நில உரிமைக்கான போராட்ட்த்தின் முதல் கட்டம் இங்கு தொடங்கியது. இக்குரல்களை அடக்குவதற்காக அவர்களது பெயர்களில் நிலங்கள் வழங்கப்பட்டதாக போலி ஆவணங்களைத் தயார் செய்தது கேரள அரசாங்கம் (ஆதாரம்:http://www.thesouthasian.org/archives/2007/chengara_land_struggle_in_kera.html).
கடந்த ஆகஸ்டு ஏழாம் தேதி முதல் பாதிக்கப்பட்ட 5000 குடும்பங்கள் இப்போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றன. குறைந்தது 24,000 பேர் பல்வேறு இடங்களிலிருந்து வந்து டெண்டு கொட்டகைகளிலும் பிளாஸ்டிக் தாள்களிலும் உறங்கி எழுந்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். அதே நேரம் “உபயோகப்படுத்தப்படாத ரப்பர் தோட்டத்தை ஆக்கிரமிப்பு செய்து போராட்டத்தில் ஈடுபட்டுவருகின்ற இம்மக்களால் கம்பெனியின் ரப்பர் உற்பத்தி பெருமளவு பாதிக்கப்பட்டுவிட்டது, இப்போராட்டத்தில் ஈடுபட்டுள்ளவர்கள் நக்ஸல்பாரிகள்” என்றெல்லாம் பல்வேறு வதந்திகளைப் பத்திரிக்கைகள் பரப்பிவருகின்றன. இம்மக்கள் பல்வேறு ‘மார்க்ஸிய’ அமைப்புகளால் தொல்லைக்கும் மிரட்டலுக்கும் ஆளாகி வருகின்றனர். போராடும் பெண்கள் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டுள்ளனர். (http://www.youtube.com/watch?v=NvI_JUCwttw)
11 வயது சிறுமி ஒருத்தி போராட்டத்தின் வெற்றிக்குப் பிறகே நான் பள்ளிக்குத் திரும்புவேன் என்று கூறியிருக்கிறாள்.

இப்போராட்டத்தில் ஈடுபட்டுள்ள பெண்கள் சி.பி.எம் தலைவரான பிரகாஷ் காரத்திடம் உதவி கேட்டுள்ளனர். திருவனந்தபுரத்திலுள்ள சி.பி.எம் அலுவலகம் முன் இவர்கள் உண்ணாவிரதம் இருந்து சென்ற பிறகு அந்த இடத்தை அலுவலகத்தினர் தண்ணீரிட்டு சுத்தம் செய்ததாக எழும் தகவல்கள் நம் மனதை நோகடிக்கச் செய்கின்றன. இத்தனைக்குப் பிறகும் இந்திய அரசாங்கத்திடம் இதுபற்றி முறையிட்டுள்ள SJVSV இது கத்தியின்றி ரத்தமின்றி நடக்கப்படவேண்டிய போராட்டம் இதற்கு நாங்கள் உறுதியளிக்கிறோம் இவர்களுக்கு உரிய நிலங்களைப் பெற்றுத் தாருங்கள் என்று அரசிடம் கோரிக்கைவிடுத்துள்ளது.

1946ம் ஆண்டு நவம்பர் இருபத்தியிரண்டாம் தேதி கேரளத்தின் கரிவல்லூர் கிராமத்தில் விவசாயிகளிடமிருந்து நிலங்களை அபகரிக்க முயன்ற அரசரை எதிர்த்த கம்யூனிஸ்டு போராளிகளைப் பிரித்தானிய அரசாங்கம் தனது துப்பாக்கிகளால் வீழ்த்தியதாகச் சொல்கிறது சரித்திரம். இன்று அதே கம்யூனிஸ்டு அரசாங்கத்திடம் செங்கல் சூளைகளால் தமது விளைநிலத்திற்கு ஆபத்து விளைவதால் அவர்களை விலகிப்போகச் சொல்லி போராடி வருகிறது எரையாம்குடி விவசாயச் சமூகம். சட்டத்துக்குப் புறம்பான பாக்ஸைட்டு சுரங்கத்திற்கெதிரான போராட்டம் காஸர்கோட்டில் இன்னும் நடந்து வருகிறது.

பிளாச்சிமடாவில் கோகோ-கோலாவிற்கு எதிரான போராட்டத்திற்குப் பிறகு மாம்பழச் சாற்றினை புட்டிகளிலடைக்கும் இடமாக இது மாறியுள்ளது. காஸர்கோட்டில் எண்டோசல்பான் என்னும் பூச்சிக்கொல்லி மருந்திற்கு எதிராக நடத்திய போராட்டத்தின் பிறகு அந்த நிறுவனம் தடை செய்யப்பட்டுவிட்டது. செங்கரா போராட்டத்திற்கும் ஒரு நல்ல முடிவு வருமானால் சிவப்பு மாநிலம் தனது கெளரவத்தைத் தக்கவைத்துக் கொள்ள ஒரு வாய்ப்புண்டு.

இப்போராட்டத்திற்கு ஆதரவாக கையெழுத்திட விரும்புகிறவர்கள் கீழ்க்கண்ட தளத்திற்குச் சென்று கையெழுத்திடலாம்.

http://www.petitiononline.com/chengara/petition.html

நன்றி: சத்தியக் கடதாசி

பின்னூட்டமொன்றை இடுக

இன்னமும் ஒரு பின்னூட்டமும் இல்லை

Comments RSS TrackBack Identifier URI

மறுமொழியொன்றை இடுங்கள்

Please log in using one of these methods to post your comment:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s