கிட்டத்தட்ட கடந்த ஒரு மாத காலமாக இந்த நியூயார்க் நகரின் குளிரின் நடுவே நடைபெற்றுக் கொண்டிருக்கும் ஒரு உயரமான கட்டிடத்தின் வேலைகளை நான் கண்காணித்து வருகிறேன். அவ்வப்போது பெய்யும் பனி, பேய்க்காற்று, ரத்தத்தை உறையச் செய்யும் பூச்சியத்திற்கும் குறைவான வெப்பநிலை இவற்றிடையில் தொடந்து தங்களது வேலைகளை துரிதமாக செய்து கொண்டிருக்கும் வேலையாட்களை பார்க்கையில் ஒருபுறம் பரிதாபமும் மறுபுறம் அவர்கள் பயன்படுத்திய தூக்கிகள் போன்ற இயந்திரங்களைக் கண்டு வியப்பும் மேலிட்டது. இரண்டு நாட்களுக்கொரு மாடி என கிட்டத்தட்ட முப்பது நாட்களில் என் கண்முன்னே ஒரு பல அடுக்கு மாடி கட்டப்பட்டுவிட்டது. இன்று காலை தேனீர் அருந்துவதற்கு முன் அதன் முன் சென்று பார்த்தேன் அதன்மேல் ஒரு அமெரிக்கத் தேசியக் கொடி பறந்து கொண்டிருந்தது.
அடையாளங்களின் உருவாக்கம் என்பது அரசியல், ஆதிக்கவர்க்கத்திலிருந்து உருவாக்கப்படுகிறதென்ற தோற்றம் ஒருபுறம் இருக்கையில் இத்தகைய அடையாளங்களில் தன்னை புகுத்திக்கொள்வதற்கான எத்தனிப்பு சாதாரண மக்களுக்கும், விளிம்புநிலையினருக்கும் ஏற்படுவதென்பதுதான் இதில் உள்ள நகை முரண். கடந்த ஒரு வருட காலமாகவே கட்டிடம் கட்டப்பயன்படுத்தப்படும் தூக்கிகள் பழுதடையும் காரணத்தால் கிட்டத்தட்ட நாற்பதுக்கும் மேலானோர் நியூயார்க் நகரத்தில் மட்டுமே விபத்துக்குள்ளாகி உயிர்துறந்துள்ளனர். அவர்களுக்கான தொழிலாளர் அமைப்புக்களில் புலம் பெயர்ந்தவர்கள் மற்றும் சமூகத்தின் பலவீனமான வர்க்கங்களிலிருந்து வருபவர்களிடம் குறைந்த சலுகைகளுடன் அதிக வேலைப்பளுவை சுமத்தும் உத்திகள் கையாளப்பட்டு வருகின்றன. எனினும், தேசியம் என்னும் சக்தியின் ஊடுறுவல் சமூகத்தின் எல்லா நிலைகளையும் சென்றடையக் காரணம் என்ன? இக்காரணங்களால் அவர்கள் துய்க்கும் பலன் யாது?
அடையாளங்களைச் சென்றடைதல் என்பது ஆதிக்கத்தின் பக்கம் செயல்லடுகையில் பல்வேறு இன, சாதி, பால், மொழிக் குழுக்களை ஒரு அடையாளக் குடையின் கீழ் கொண்டு சேர்ப்பதில் விரிகிறது. மற்றொரு பக்கம் விளிம்புநிலைப் பிரஜைகள், பெண்கள், வேற்று மொழி/இனத்தைச் சார்ந்தவர்களும் இந்த தேசிய அடையாளத்தினுள் புகுவதற்கான எத்தனிப்பையும் தேவையையும் பெருந்தேசிய அடையாளங்கள் ஏற்படுத்திவிடுகின்றன. அதேசமயம் தங்கள் நம்பிக்கைகள், சுய மரியாதை, உரிமைகள், கலாச்சார அடையாளங்கள் போன்றவற்றிற்கு களங்கம் ஏற்படாமலும் பாதுகாத்துக் கொள்ளும் சாத்தியங்கள் விளிம்பு நிலையினரைக் கேள்விக்குள்ளாகின்றன.
(தொடரும்)
2 பின்னூட்டங்கள்
Comments RSS TrackBack Identifier URI
[…] தேசியம் தேடும் உடலும் அடையாளமும் […]
[…] தேசியம் தேடும் உடலும் அடையாளமும் -மோனிகா […]