எனக்குப் பிடித்த கவிதைகள்-1

ஆத்மா நாம் கவிதைகள்

பழக்கம்

எனக்குக் கிடைத்த சதுரத்தில்

நடை பழகிக் கொண்டிருந்தேன்

கால்கள் வலுவேறின

நடப்பதில் ஒரு மகிழ்ச்சி உண்டாயிற்று

என் நடப்பைத்

தெரிந்து கொண்ட சில மக்கள்

விளம்பினர்

ரோட்டிலேயே நடக்க முடியவில்லை

ஒரு சதுரத்தில் நடக்கிறானாம்

நான் என்ன நூறு நாட்கள் நூறு பாம்புகளுடனா நடக்கிறேன்

என் கால்கள்

என் நடை

என் சதுரம்

மறுபடி மறுபடி

சொல்லச் சொல்ல

சொற்கள் மயங்கும்

எழுத எழுத

எழுத்து இறக்கும்

குழம்பும் மனதில்

எழுத்தும் சொல்லும்

குப்பைமேட்டில்

கிடக்கும் பொருட்கள்

வரிகள் ஆகும்

வார்த்தைகள் எல்லாம்

விளக்கும் தத்துவம்

தான் என்ன

காற்றில் இருக்கும்

வார்த்தைகள் எல்லாம்

காதில் சொல்லும்

ரகசியம் என்ன

குருவை சிஷ்யன்

மறுபடி மறுபடி

குருவின் உதட்டில்

மறுபடி மறுபடி

சிஷ்யன் மறைந்தான்

குருவாய் மாறி

-நன்றி: காகிதத்தில் ஒரு கோடு