இலையுதிர்காலக் கவிதைகள்-1

புனைவரைவில் கட்டுற்ற கனங்களை

முடிச்சவிழ்க்கப் போய்

முரட்டுக்கயிறுகள் கிழிக்க ரணமாயின எனது விரல்கள்.

மிளிர்ந்தொளிரும் பிளாஸ்டிக்  பூக்களின்

நடிப்பைக் கிழிக்க நடுவில் கிடைக்கலாம்

மழை பெய்யப் புறப்படும்

என் மண்ணின் வாசனை.

மானசீகமாய் மனத்தில் புதைந்தழுத்தும் பிரபஞ்சம்

கவிதை எழுத எழுத்தாய் மாறி

உணர்வினுள் ஒளியும்.

இருத்தலின் சுமையிறக்க பேயாடுமிந்த இறைமை புகு தன்னிலை.

தன்னிலை தன்னை ஆட்டிப்படைக்க

திரும்பத் திரும்ப தொடங்கும் முடிவுகள்.

இருத்தலில் என்ன? நினைத்தலில் என்ன?

இல்லா உலகில் இலைகள் உதிர்ந்தன…

ஆறு கவிதைகள்

இரைதேடி

வான் விழுங்கி

வயிற்றில் நெருப்பாக்கி

கடல் விழுங்கி

கிணற்று நீராக்கி

கண்ணீரின் உப்பையுண்டு

காடுவிளைவித்த பூமி

வெண்ணீரைக் கொட்டி

விரல் நீட்டியது.

இன்னும் பசி இன்னும் பசியென.

இடுக்கிடுக்கே வாய் பிளந்து

இறையை, மனிதரை

உண்டுப்பெருத்தது.

பெண்ணென்பார் பூமியை..

பொறுத்த பின்னர்

வெடிக்கத்தான் வேண்டும்.

-2002 குஜராத் சம்பவத்திற்குப் பிறகு

நன்றி: பறத்தல் அதன் சுதந்திரம்

வழியை யாரோ மாற்றி வைத்து விட்டார்கள்

கள்ளுண்டவளானேன் நான்.

கனக்குது இதயம்.

கைக்கெட்டாமல் போன

வானத்தினடியில்

கொட்டாவிவிட்டுக் கொண்டிருக்கும்

இந்த கிழட்டு மரக்குயில்கள் கண்டு

“சொர்க்கத்துக் குயில்கள்

நீயின்றி அமைதி காக்கின்றன’

என்று பிரெஞ்சுப் பழமொழி

பேசுகிறாள் தோழி.

சொர்க்கத்தைத் தேட வேரோடிப்போன

இந்த வழியில்தான்

காணாமற்போனது கானகம்.

மனது நிறைய கானகம் கொண்டு

வழி மறந்தேன் நான்.

மாற்றி வைத்த வழிகளினிடையே

கவிதை பேசப்போய்,

கனக்குது இதயம்

காக்கையின் எச்சமாய்.

இனியும் எத்தனை நாட்கள்

இன்னமும் எத்தனை நாட்களென

இயலாமை தொனிக்கக் கேட்டேன்.

இறுகி வளர்ந்த இந் நாகரிகப் பாறை

உடையப் பெருகும் மானிட ஊற்றென.

எரிந்து மடியும் வீட்டின் சாம்பலும்

எடுத்தெரியப்பட்ட வயிற்றுச் சிசுவும்.

சாதித் தீயின் சாத்தியம் வளர

ஆதியும் அந்தமும் ஆடிப்போனேன்.

இனியொரு முறை நான்

இறக்க வேண்டாம்.

எனில் இனி எத்தனை நாட்களென

இயலாமை தொனிக்கக் கேட்டேன்.

– குஜராத் 2002 இனப்படுகொலையின் பிறகு

காதல் கொண்டு செல்

களம் பெரியது.

கையகப்பட்ட வாழ்க்கையும் அதுவே.

நிலவு, நித்திரை, நேற்றிரவு கண்ட

மொட்டை மாடியென

நினைவு பொய்யில்லை.

நெருஞ்சியென நீர்க்கோர்த்துப்

பருத்துக் கிடக்கும்

கனவும் அப்படித்தான்.

நினைவுகள் கனவுண்டு

நகருகையில் நீண்டு நீண்டு

நெருங்க முடியாமல் ஓடும்

நாட்குறிப்பு.

குறித்து வைக்க நாளா இல்லை?

கொண்டுவா பார்ப்போம் எனக்கூற..

களம் விரியும்

கனவு போல். கனவினுள் புகும் காற்று போல்.

நினைவுகள் பெரிதாகிக் கொண்டு போகும்,

பின்னர் நாட்குறிப்பை கிழித்துக் கொண்டு கொட்டும்.

வருகின்ற நாட்கள் முட்டித் தலை சாய்க்க

கடந்ததன் நகமாய் காலம் பிடித்துந்த

கழிவிறக்கம் கொண்டு சொல்லும்

“காதல் கொண்டு செல்” என.

அழகிகள் உறங்கும் நகரம்

இரவு நேரத்தில் ஒலி எழுப்புவதாய்

தோன்றிற்று இந்த அலமாரி.

கட்டிவைக்கப்பட்ட உலகங்களாய்

தோன்றின புத்தகங்கள்.

வார்த்தைகளும் விஷயங்களும் தாண்டி

வடிவமுற்று வியாபித்த செவ்வகங்கள்.

புதியவற்றின் வாசனை

பழையன கொண்ட பூச்சி வாசம்.

அட்டை கிழிந்து தொங்கும் அழகு.

நூலகத்திலிருந்து தப்பிவந்தவை,

நண்பர்களிடம் திருப்பித்தராதவையென

நித்திரை கொள்ளுமுன் பார்த்தேன்

எனது அலமாரி,

அழகிகள் உறங்கும் நகரம் என.

நீ

முகச்சவரம் செய்ய ரசம் போன கண்ணாடி

முட்டியைத் தொட்டிராத அரைக்கால் சராயின்

பாக்குக் கறை

போட்டுப் பிய்ந்த பெல்டின் முனைக் கம்பி

குதிக்கால் ஓட்டையான “கோவார்டிஸ்” செருப்பு

என நீ மனமுடைவது வெளிதெரிந்தாலும்

தீட்டுத் துணிக்கும் தினம்போடும் உள்ளாடைக்கும்

ஆத்தாவைக் கேட்டால் அது திட்டும்,

நீ வேலைக்குப் போகும் பையன்.

கண்ணாடி வளவியும் கலர் ரிப்பனும்

பத்து ரூபாய் கொலுசும் பழசாகிப் போக

பாவாடை தாவணியும்

பவுன் நகையும் தேடப்போய்

பெரிய மனுசனானாய் நீ.

பானை துலக்கலானேன் நான்.

கவிதைகள் ஏழு

எல்லாமாகிய

தொட்டும் தொடாமற்

தொடுகோடாய்ப் போன நீ

கட்டித் தழுவாயோவென

வட்டத்திற்கு வருத்தம்.

கட்டிக் கனதூரம்

வட்டமாக்கியதே நானென

ஆரத்திற்கோ ஆராத்துயரம்.

விட்டமாய்ப் பாய்ந்து

விகிதம் பெருக்கி

பரிதித் தொட்டு பல ஆரமிட்டு

சுற்றும் கோட்டிற்கோ

பொல்லாத மெளனம்.

சன்னல்

நாம் பேசுவதற்கு என்றுமே ஏன்

சன்னலோரங்களை தேர்ந்தெடுத்தோம்..

நம் வார்த்தைகளை காற்றில்

தொலைக்க நினைத்ததாலா?…

நம் பொய்கள் பூமியைக் கடந்து

ஓடவேண்டும் என்பதாலா?…

நம் அறையின் இருள் நம் அச்சங்களைப்போல்

வெளித்தள்ளப்பட வேண்டும் என்பதாலா..

வெளிச்சங்களில் நம் குரல் விஸ்தரிக்க

இருட்டு மனிதர்களாக நாம் இறந்துபோவது

இதமாயிருப்பதாலா..

நமது இரட்டை வேடங்களை அறையிலிருத்தி

வெளிப்பச்சையை விமர்சிக்க

விடம் கொண்டதாலா..

இல்லை.. கதவுகளினருகில் நாம் வெளியேறிப்

பிரிந்துவிடுவோம் என்பதாலா..

சன்னலுக்குள் ஒரு ஆகாயம்

கொண்டுவந்து சிறைப்படுத்தி மகிழ்ந்தோமா..

அதுவுமில்லை ஆகாயம் சிறையெனவே

அறையை நிர்மாணித்தோமா..

என்னுலகம்

பூங்காவிலிருந்து எழுந்து

பூட்டைத்திறந்து வீட்டிற்குள் போனேன்.

வெறுமை தலை நீட்டியது.

பூச்செடி சில வாங்கி வீட்டில் வைத்தேன்.

கற்சிலைகள் சில,

கால் நோகுமென்பதால் நாற்காலி,

வெற்றுச் சுவருக்கு ஒரு குட்டி ஓவியம்,

எடுத்துப் படிக்க ஏடுகள் பலவென்று

வீட்டை எழுப்பினேன்..

வீடு எனதாயிற்று.

நூலகம், பூங்கா, நெடுஞ்சாலை, நிழற்கூடமென

எல்லாம் போயின..

பொதுச் சொத்து, பொது இடமென

பிரித்துப் பார்க்க

தனிச்சொத்தாய் என்னுலகம் குறுகியது

என் வீடாக..

ஏழ்மையெனப்படுவது யாதெனில்..

எட்டு நாள் பட்டினி

அகத்திக் கீரை பறித்துவந்து

அம்மா புகட்டுவாள்.

துணிமணிக் கிழிய பழைய

பட்டுச்சேலை கிழித்துப் பாவாடையாக்கி

பளபளக்கச் செய்வாள்..

பசியோ, தாகமோ..

பகல் முழுதும் விளையாட்டு,

இரவில் பாட்டென.. எல்லாக் காலமும்

நல்லாய்ப் போகும்.

ஏழ்மையை உணர்ந்தது

எட்டாம் வகுப்பில் வரலாற்றுப் புத்தகம்

திருடிய போதுதான்.

மெளனம்-மொழி-சாத்தியம்

வெற்றுத்தாளென ஒரு

ஒற்றைத்தாளை

பார்க்கையில் விளையும்

சந்தோஷம், ஏன்

ஒரு வெற்றுநாளின்

வெறுமையை கவலைக்கிடமாக்குகிறது.

பொருளற்ற அறையின்

எதிரொலிச் சாத்தியம்

மனதிற்கும் வாய்க்கையில்

மெளனம்தான் அரவம்.

புற்றின் வெறுமை – காற்றோட்டம்.

புதிய பரிமாணம் – வளர்ச்சி.

வெற்றுத்தாள் முன் மட்டுமே

எண்ணற்ற சாத்தியம்.

இனி சிட்டுக் குருவிகளிடமிருந்து கற்பதற்கு ஒன்றும் இல்லை.

என்முன்னே..

சன்னலின் வழியே சின்னக் குருவிதட்ட

சுக்கு நூறாய்ப்போன கண்ணாடியூடே

நான் என்று உணர்ந்த நான்

நானாகிப்போன நான்

என் முகவெட்டும் புகைப்படமும்

என் கொங்கைகளும் தாய்மைப் பசியும்

மனவெளியும் ஓவியமும்

இன்னும் பலவும்.

பிணி கொண்டலையும் புலியைபோலவே

அனுபவம் மதர்த்த தனிமைத்தேடலில்

நான் பெரிய மிகப்பெரிய

போரில் புஜம் தட்டும் பகவானேபோல

என் முன்னே..

நான் மரமாய், கிளையாய், மதிற்சுவராய்,

கற்றூணாய், காகிதமாய்

எனக்கு வெளியே

எதிரொலி மறுத்த நிஜமாய்..

சொல்லின் பொருளுக்கப்பால்..

பறந்து சென்ற சிட்டுக்குருவியறியாத ரகசியமாய்

செயலாய் சுயமுற்றெழுந்த நான்

இனி சிட்டுக்குருவிகளிடமிருந்து

கற்பதற்கொன்றுமில்லை.

நன்றி: சாகித்திய அகாதமி

வாமனப் பிரஸ்தம்

அப்பாவுக்கு போன்சாய்களைப் பிடிக்காது.

அம்மாவின் பிறந்தகத்தை குந்தகம் சொல்வார்.

ஓவியம் தெரிந்தும் அம்மா

அதிகம் வரையமாட்டாள்.

பாடத் தெரிந்தும் லவகுசா பாடல்கள்

மட்டும் பாடி கண்ணீர் உகுப்பாள்.

அம்மாவின் செருப்பு எப்போதும்

குழந்தைகள் அளவின் நடுவே.

நாற்பது வயதில் நடு வீட்டில்

கோலி விளையாடும் குழந்தையாய் போனாள் அம்மா.

வாமனப் பிரஸ்தமாம் போன்ஸாய்கள்.

அப்பாவுக்கு போன்ஸாய்கள் பிடிக்காது.